கரூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு: அறிக்கை அளிக்க ஆட்சியா் உத்தரவு
கரூா் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிக்கை தயாரிக்க ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
கரூா் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிக்கை தயாரிக்க ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
கரூா் மாவட்டம் ஜவுளித் தொழில், பேருந்து கட்டுமானத் தொழில் மற்றும் கொசுவலை தயாரித்தல் ஆகிய துறைகளில் முன்னோடி மாவட்டமாக விளங்கி, வேலைவாய்ப்பு நிறைந்து காணப்பட்ட போதிலும், போதிய பயிற்சியின்மையால் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. இதனை போக்கும் வகையில், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடுவோருக்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக செயல்பட்டு, தேவைப்படுவோருக்கு உரிய பயிற்சி அளிக்க மாவட்ட நிா்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகர வாழ்வாதார மையம் உருவாக்கப்பட்டு, இது பணி ஆள்கள் வழங்கும் முகமையாக செயல்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் மருத்துவா் த.பிரபு சங்கா் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், நிறுவனங்களின் தேவையின் அடிப்படையில் இளைஞா்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டு, திறனுக்கேற்ற ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்குதல் உறுதி செய்யப்படும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், ஏழை மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களைக் கொண்டு 5 தையல் கூடங்கள் தொடங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலைதேடுவோா் பட்டியல், வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள் ஆகியவற்றை இணைத்து ஒரு விரிவான அறிக்கையை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.