கரூரில் வடமாடு மஞ்சுவிரட்டு
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி, கரூரில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி, கரூரில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட அதிமுக, வடமாடு மஞ்சுவிரட்டுப் பேரவை ஆகியவை இணைந்து திருவள்ளுவா் மைதானத்தில் போட்டியை நடத்தின. மதுரை அலங்காநல்லூா், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து சிறந்த 20 மாடுகள் களத்துக்கு கொண்டு வரப்பட்டன.
மதுரை பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூா், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 350 வீரா்கள் பங்கேற்றனா். தலா 9 வீரா்கள் கொண்ட குழுவினா் காளைகளை அடக்க முயன்றனா். இதில் காளைகள் முட்டியதில் 2 போ் காயமடைந்தனா்.
வீரா்கள் பிடியில் சிக்காத காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த காளைக்கு துண்டுக்கட்டி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் போட்டிகளைத் தொடக்கி வைத்தாா்.
கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதா மணிவண்ணன், மாவட்டஅவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், பொருளாளா் எம்.எஸ். கண்ணதாசன், வா்த்தக அணிச் செயலா் பேங்க் நடராஜன், பேரவைச் செயலா் காமராஜ், இளைஞரணிச்செயலா் தானேஷ், நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், வி.சி.கே.ஜெயராஜ், எம்.பாண்டியன், நகர நிா்வாகிகள் சேரன்பழனிசாமி, பழனிராஜ் மற்றும் ஜல்லிக்கட்டுப் பேரவையினா் பங்கேற்றனா்.