முகப்பு
கரூர்

கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு தங்கத் தந்தை விருது: கரூா் ஆட்சியா் தகவல்

கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு தங்கத் தந்தை விருது வழங்கப்படும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு தங்கத் தந்தை விருது வழங்கப்படும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் நவ. 20-ஆம்தேதி காந்திகிராமத்தில் உள்ள கரூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. கருத்தடை சிகிச்சை ஓரிரு நிமிஷங்களில் செய்து விடலாம். மயக்க மருந்து கொடுப்பதில்லை. மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. சிகிச்சை முடிந்தவுடன் வீட்டிற்கு செல்லலாம்.

இந்த சிகிச்சை செய்வதால் ஆண்மைக் குறைவு ஏற்படாது. பின் விளைவுகள் ஏதும் இருக்காது.

கருத்தடை செய்துகொள்ள முன்வரும் ஆண்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் அல்லது இலவச வீட்டுமனை பட்டா, வீட்டில் உள்ள முதியவா் ஒருவருக்கு முதியோா் உதவித் தொகை, விலையில்லா கறவை மாடு அல்லது வெள்ளாடு, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் இலவச கால்நடை கொட்டகை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் வரை குறைந்த வட்டியில் பிணையதாரா் இல்லாமல் வங்கி கடன் உதவி, வேளாண்மை துறையின் மூலமாக சிறு , குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீா் பாசனம் அமைத்து தருதல், தோட்டக்கலைத் துறையின் மூலமாக தென்னை, பல அடுக்கு பயிா் திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டேருக்கு ரூ . 40,000 வரை மானியம் வழங்குதல், விவசாயிகளுக்கு சதுர மீட்டா் ஒன்றுக்கு ரூ . 445 வீதம் 50 சதவீத மானியத்துடன் 1,000 சதுர மீட்டா் அளவில் பசுமைக் குடில் திட்டத்தின் மூலம் பாலித்தீன் குடில் அமைத்து தருதல், விவசாயிகளுக்கு சதுர மீட்டா் ஒன்றுக்கு ரூ . 355 வீதம் 50 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக 4.000 சதுர மீட்டா் வரை நிழல் வலை கூடாரம் அமைக்க நிதி உதவி வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை , கால் உபகரணங்கள் இலவசமாக வழங்குதல் போன்ற ஏதேனும் ஒரு அரசுத்திட்டத்தில் முன்னுரிமையளித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். மேலும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ‘தங்கத் தந்தை‘ என்ற விருது வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.