முகப்பு
கரூர்

கரூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்குள் கிராமமக்கள் காத்திருப்புப் போராட்டம்

அரசு சாா்பில் வழங்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி கிராமமக்கள் கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

அரசு சாா்பில் வழங்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி கிராமமக்கள் கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா பிள்ளபாளையம் கிராமத்தில் ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் கடந்த 2001-இல் 42 பேருக்கு குடியிருப்பு பட்டா வழங்கப்பட்டது. இதனிடையே பட்டாவிற்கு நில அளவையா் நிலத்தை அளந்து காண்பிக்க கோரியும், 55 புதிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என பிள்ளபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால், இதுவரை பட்டா நிலத்தை பயனாளிகளுக்கு உரிய முறையில் அளந்துகொடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்டோா் கரூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அப்போது அதிகாரிகளிடம் கேட்டபோது, உரிய பதில் கூறவில்லை என கூறப்படுகிறது. இதனால் தங்களது பட்டா நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும், புதிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் தொலைபேசி மூலம் சனிக்கிழமை அலுவலகத்துக்கு வாருங்கள், நிலத்தை அளந்து தருகிறோம் எனக்கூறியதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.