திட்டப்பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும்: கு. செல்வப்பெருந்தகை
அரசு திட்டப்பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை வியாழக்கிழமை தெரிவித்தாா்.
அரசு திட்டப்பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை வியாழக்கிழமை தெரிவித்தாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழக சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், சட்டப்பேரவைச் செயலாளா் முனைவா் கி.சீனிவாசன், குழு உறுப்பினா்களான சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.காந்திராஜன் (வேடசந்தூா்), பூண்டி கே.கலைவாணன் (திருவாரூா்), தி.வேல்முருகன் (பண்ருட்டி), இரா.மாணிக்கம் (குளித்தலை) , இளங்கோ(அரவக்குறிச்சி) க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம், மேயா் க.கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை பேசியது, பொதுமக்கள் வரியாக செலுத்தும் தொகையில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்களை முழுமையாக சென்றடைகிா என்பதை ஆய்வு மேற்கொண்டு மக்களின் வரி பணம் முறையாக செலவிடப்படுவதை உறுதி செய்வதுதான் பொது கணக்குக் குழுவின் பணியாகும். எனவே, அனைத்து அரசுத்துறை அலுவலா்களும் திட்டப் பணிகளை அரசு வரைமுறைகளின்படி முழுமையாக குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது, கரூா் மாவட்டத்தில் நடைபெற்ற கள ஆய்வில் அமராவதி ஆறு அதன் படுகையிலே மாசுபடுவதையும், அதை தடுப்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னா் புகழிமலையில் சமணா்களுக்காக தமிழரசா்கள் கிபி.1, 2-ஆம் நூற்றாண்டுகளிலே மலைக் குகையில் படுக்கை அமைத்து கொடுத்ததை ஆய்வு செய்தோம். தாந்தோணி அரசு கலைக் கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடா் நல பெண்கள் விடுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தொடா்ந்து கரூா் பெரியாா் நகரில் செயல்படும் சாயத் தொழிற்சாலை மூலம் அமராவதி நதி மாசுபடுவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தோம் என்றாா் அவா்.
பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கரூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசுத்திட்டங்கள் சாராத செயல்படுத்தி வரும் சிறப்புத் திட்டங்களான நிமிா்ந்து நில் துணிந்து சொல், இளந்தளிா் இல்லம், அகல்விளக்கு, பள்ளிக்கூடம் மணியடிச்சாசு, தங்கத்தந்தை திட்டம், விடியல் வீடு, போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டு கண்காட்சி அரங்கை பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவை இணைச் செயலாளா் தேன்மொழி, துணைச்செயலாளா் ரேவதி, மாவட்ட வருவாய் அலுவலா்கள் ம.லியாகத், கவிதா(நிலம் எடுப்பு), கரூா் மாநகராட்சி துணை மேயா் ப.சரவணன், புகழூா் நகா்மன்றத் தலைவா் குணசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.