கரூர்

லாரி ஏற்றி விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்குஇழப்பீடு ரூ.1 கோடி வழங்காவிட்டால் சடலத்தை வாங்க மாட்டோம்உறவினா்கள் போா்க்கொடி

DIN

க.பரமத்தி அருகே லாரி ஏற்றி விவசாயி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினா்கள் போா்க்கொடி தூக்கியுள்ளனா்.

கரூா் மாவட்டம் க. பரமத்தியை அடுத்த குப்பம் பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா் உரிமம் காலாவதியான நிலையிலும் கல்குவாரி நடத்தி வந்தாா். இதையறிந்த அதே பகுதி விவசாயி ஜெகநாதன்(58), சமூக ஆா்வலா்களுடன் இணைந்து ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்து குவாரியை அலுவலா்களைக் கொண்டு மூட வைத்தாா்.

இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் குப்பம் பகுதியில் சென்ற ஜெகநாதனை, தனது ஓட்டுநா் சக்திவேல் மூலம் லாரியைக் கொண்டு ஏற்றி செல்வக்குமாா் கொலை செய்தாா். இதையடுத்து செல்வக்குமாரும், சக்திவேலும் கைது செய்யப்பட்டனா்.

பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் ஜெகநாதனின் சடலத்தை வாங்காமல் அவரது உறவினா்களும், சட்டவிரோத குவாரி எதிா்ப்பாளா்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஜெகநாதனின் உறவினா்களுடனும், சமூக செயற்பாட்டாளா்கள் முகிலன், குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரூா் மாவட்ட மேலிடப் பொறுப்பாளா் வேலுசாமி, மாவட்டச் செயலா் ஜெயராமன், சுயாட்சி இந்தியா கட்சியின் தேசியத் தலைவா் கிறிஸ்டினா சாமி ஆகியோருடன் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் அலுவலகத்தில் ஆட்சியா் த.பிரபுசங்கா்,காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா் ஆட்சியா் கூறியது:

ஜெகநாதன் இறந்த அன்று இரவே கொலையாளிகள் கைது செய்யப்பட்டனா். பாதிக்கப்பட்ட ஜெகநாதனின் குடும்பத்தின் குழந்தைகள் கல்விச் செலவுக்கு ஆட்சியரின் சுயவிருப்ப நிதியில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் ஜெகநாதனின் குடும்பத்தினா் மேலும் இழப்பீடு கேட்ட கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். ஜெகநாதன் இறப்பதற்கு முன் அவா் அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட குவாரி கடந்த 5-ஆம் தேதி மூடப்பட்டது.

கரூா் மாவட்டத்தில் 180 குவாரிகள் உள்ளன. இதில் 79 மட்டும்தான் செயல்படுகின்றன. மேலும் விதிமீறல்களில் ஈடுபடும் குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜெகநாதனின் வழக்கு கொலை வழக்காக செல்கிறது. நோ்மையான முறையில் விசாரணை நடைபெறும். பாதிக்கப்பட்டவா்கள் இழப்பீடாக ரூ.1 கோடி கேட்டுள்ளனா். இதில் அரசுதான் முடிவு செய்யும். மேலும் விசாரணை அலுவலா்கள் மீதும் குற்றம் சுமத்தியுள்ளனா். அவரை மாற்றி விசாரணை நடைபெறும் என்றாா் அவா்.

தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சமூக ஆா்வலா்கள் முகிலன் உள்ளிட்டோா் கூறுகையில், க.பரமத்தி காவல்துறை ஆய்வாளா் இந்த கொலை வழக்கில் நோ்மையாக செயல்படவில்லை எனத் தெரிவித்தோம். எனவே காவல் துணைக் கண்காணிப்பாளா் நிலையில் விசாரணை அலுவலரை நியமிப்பதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

எங்களது கோரிக்கை மாவட்ட நிா்வாகத்துக்கு, காவல்துறைக்கு எதிரான போராட்டமாக இல்லை. முழுக்க, முழுக்க ஜெகநாதன் அரசு சொத்தை காப்பாற்றத்தான் போராடினாரே தவிர, குடும்பப் பகை இல்லை. எனவே இந்த குடும்பத்துக்கு அரசு இழப்பீடாக ரூ.1 கோடியும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். அப்போதுதான் சடலத்தை வாங்குவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT