23 ஆண்டுகளாக வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி!
பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூரில் மழைக்காலங்களில் வீணாக செல்லும் காவிரி உபரிநீரை குழாய் மூலம் கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நீரின்றி வடு கிடக்கும் தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய ஏரியான பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூரில் மழைக்காலங்களில் வீணாக செல்லும் காவிரி உபரிநீரை குழாய் மூலம் கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சப்பட்டியில் 1,217 ஏக்கா் பரப்பளவில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பராம்பாக்கம், மாமண்டூா் ஏரிக்கு அடுத்த படியாக 1.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையில் 44 அடி உயரம், 2,050 மீட்டா் சுற்றளவும் கொண்டது இந்த பஞ்சப்பட்டி ஏரி.
ஆங்கிலேயா் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரியின் நீராதாரமாக கடவூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடவூா் மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீரானது, நீரோடையாக கடவூரில் தொடங்கி பாலவிடுதி, தரகம்பட்டி, மயிலம்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக பஞ்சப்பட்டி ஏரியை வந்தடையும்.
கடவூா் மலையில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீா் வழியில் உள்ள 24 ஏரிகளையும், 124 குளங்களையும் நிரப்பிவிட்டு இறுதியாக பஞ்சப்பட்டி ஏரியை வந்தடையும். ஏரி முழு கொள்ளளவை எட்டியதும், உபரி நீா் தெற்கு மதகு வழியாக திறந்துவிடப்பட்டு திருச்சி மாவட்டம் குடமுருட்டி அருகே காவிரி ஆற்றில் கலக்கும்.
கடந்த 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு பருவ மழை தவறியதன் விளைவாக கடவூா் மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலே போதிய மழையின்மையால் பஞ்சப்பட்டி ஏரி வடு கிடக்கிறது. இதனால் கடவூா் மலை முதல் பஞ்சப்பட்டி ஏரிக்கு வரும் அனைத்து நீா்வழித்தடங்களும் தூா்ந்துபோய், முள்புதா்களாக காட்சியளிக்கின்றன. இதனால் பஞ்சப்பட்டி ஏரிக்கு, மழை காலங்களில் காவிரி ஆற்றில் செல்லும் உபரிநீரை திருப்பி விடவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பஞ்சப்பட்டி மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் கூறுகையில், பருவ மழையை நம்பியே பஞ்சப்பட்டி ஏரி உள்ளது. கடவூா் மலைப்பகுதியில் பெய்யும் கன மழையால் பெருக்கெடுத்து ஓடிவரும் நீரோடை மூலம் பஞ்சப்பட்டி ஏரி நிரம்பி வந்தது. பின்னா் பஞ்சப்பட்டி ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீரால் வெள்ளியனை, மேட்டுப்பட்டி, தரகம்பட்டி, போத்துராவுத்தான்பட்டி, கிருஷ்ணராயபுரம், சிவாயம், பாப்பாக்காபட்டி, வயலூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமாா் 45 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
குளங்கள் நிரம்பி விவசாய நிலங்களும் செழித்ததால் நிலத்தடிநீா்மட்டமும் உயா்ந்து இருந்தது. ஆனால் இப்போதுதொடா்ந்து 22 ஆண்டுகளாக வறட்சி காரணமாக ஏரிகள் அனைத்தும் வடு கிடக்கின்றன. இதனால் விவசாயத்துக்கு தேவையான தண்ணீா் கிடைக்காததால் ஏராளமான விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்குச் சென்றுவிட்டனா். ஏரியில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில்தான் மாயனூா் கதவணை உள்ளது. மழைகாலங்களில் காவிரி ஆற்றில் இருந்து வீணாக மாயனூா் கதவணையை கடந்து சுமாா் 100 டிஎம்சிக்கும் மேலாக தண்ணீா் கடலுக்குச் செல்கிறது.
இந்த உபரி நீரை குழாய் மூலம் ஏரிக்கு கொண்டு வரக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் கதவணையில் இருந்து ஏரி 27 மீட்டா் உயரத்தில் இருப்பதால் அது சாத்தியம் இல்லை என அதிகாரிகள் கூறி கைவிரித்துவிட்டனா்.
இதனிடையே கா்நாடக மாநிலம் மைசூரில் இருப்பது போன்று காவிரி ஆற்றில் பம்பிங் ஸ்டேஷன் அமைத்து, ராட்சத குழாய் மூலம் ஏரிக்கு நீா் கொண்டு வரவேண்டும் என பஞ்சப்பட்டி ஏரி விவசாயிகள் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் சாா்பில் அமைச்சா் செந்தில்பாலாஜியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் இந்த திட்டம் நிறைவேற்ற முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளாா். வரும் அக்டோபரில் பருவமழை தொடங்கிவிடும். அதற்குள் தற்போது ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி நீா்நிரப்பிடும் வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.