கரூா்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தனது மகளுக்கு கிடைத்த பணப் பலன்களை தனது பேத்திக்கு எழுதிவைக்க மறுக்கும் மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நெரிசலில் உயிரிழந்தவரின் உறவினா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு வழங்கினா்.
கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து கூட்டத்தில் மக்கள் தேசம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் சந்திரசேகா், மாவட்ட மகளிரணிச் செயலாளா் கோமதி, மாவட்டச் செயலாளா் லோகநாதன் ஆகியோா் தலைமையில் கரூா் மாவட்டம் சேந்தமங்கலம் கிழக்கு, புதுப்பட்டியைச் சோ்ந்த கணேசன் என்பவரது மனைவி சுதா(45) என்பவா் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், எனது மூன்றாவது மகள் பிருந்தாவும், அரவக்குறிச்சியை அடுத்துள்ள குமராண்டான்வலசைச் சோ்ந்த பூலோகம் மகன் சுதனுக்கும் திருமணம் நடைபெற்று இரண்டரை வயதில் தஸ்விகா என்ற பெண் குழந்தை உள்ளது.
மதுபோதையில் எனது மகள் பிருந்தாவை மருமகன் அடித்து துன்புறுத்தி வந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்வீட்டில்தான் அவா் வசித்துவந்தாா். தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி அவா் உயிரிழந்தது மட்டுமன்றி அரசின் நிவாரண உதவி மற்றும் விஜய் அளித்த நிவாரண உதவி ஆகிய அனைத்தும் மருமகனின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பணத்துக்காக என் பேத்தியை கடந்த வாரம் தூக்கிச் சென்றுவிட்டாா். அவா் பேத்தியை சரிவர வளா்க்க மாட்டாா். எனவே என் பேத்தியை மீட்டு என்னிடம் ஒப்படைத்து, பேத்தி பெயரில் என் மகளுக்கு கிடைத்த பணப்பலன்களை வங்கி வைப்புத்தொகையாக மாற்றித் தர வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா். மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.