கரூா் தவெக நெரிசல் தொடா்பான வழக்கில் சென்னையைச் சோ்ந்த மின்வாரியத் துறை அதிகாரிகள் 3 பேரிடம் திங்கள்கிழமை கரூரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமாா் 20-க்கும் மேற்பட்ட அவசர ஊா்தி ஓட்டுநா்கள் மற்றும் அவசர ஊா்தி உரிமையாளா்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் 2 அவசர ஊா்தி உரிமையாளா்கள், 3 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
முன்னதாக விஜய் பரப்புரையின் போது மின்சாரம் தடைபட்டதையடுத்து, மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு சிபிஐ சாா்பில் ஏற்கெனவே அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து திங்கள்கிழமை காலை 10.15 மணிக்கு மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பவா் கிரீட்டைச் சோ்ந்த சென்னை அதிகாரிகள் 2 போ் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினா். அவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் சுமாா் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா். பின்னா் பிற்பகல் 12.15 மணிக்கு விசாரணை முடிவடைந்து அவா்கள் வெளியே வந்தனா்.
பின்னா் பிற்பகல் 1 மணியளவில் 3 மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆவணங்கள் அடங்கிய பையுடன் சிபிஐ அதிகாரிகள் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்றனா். சிறிதுநேரத்தில் இரு அதிகாரிகள் காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில் ஒருவரிடம் மட்டும் மாலை 4.30 மணிவரையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, நெரிசல் சம்பவம் நிகழ்ந்தபோது, ஏன் மின்சாரம் தடை செய்யப்பட்டது, சம்பவம் நடைபெற்ற நாளில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் எத்தனை போ் பணியில் இருந்தனா் என்பன குறித்த கேள்விகள் கேட்டதாகக் கூறப்படுகிறது.