கரூா்: வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி டிச.4-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என செவ்வாய்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கரூா் வெண்ணைமலையில் கோயில் நிலப் பிரச்னையில் அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அப்பகுதி மக்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன், மாநில பொதுச் செயலா் சாமி நடராஜன், மாநிலச் செயலா் பி.பெருமாள், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவா் வ.செல்வம், பொருளாளா் டி.துரைராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் மாவட்ட செயலா் மா.ஜோதிபாசு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கே.கந்தசாமி, செயலா் கே.சக்திவேல், கரூா் ஒன்றியச் செயலா் சி.முருகேசன், விசிக தொழிலாளா் விடுதலை முன்னணியின் சுடா்வளவன், பொருளாளா் சதீஷ் உள்ளிட்டோா் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா். பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட கடைகளை பாா்வையிட்டனா்.
தொடா்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூா் மாவட்ட குழு அலுவலகத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், வெண்ணைமலை கோயில் நிலத்தில் குடியிருப்பவா்களை வெளியேற்றாமல் இருக்க தமிழக அரசு சட்டப்பேரவையில் சிறப்பு சட்டத்தை
நிறைவேற்றி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டிச. 4- ஆம் தேதி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.