கரூர்: கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள வீடுகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுடன் மக்களும் அரசியல் கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருப்பவா்களை அப்புறப்படுத்தி நிலத்தை மீட்டு கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், கோயில் நிலத்தில் குடியிருப்பவா்கள் கோயிலுக்கு வாடகையோ அல்லது குத்தகையோ செலுத்த வேண்டும். இல்லையென்றால், குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, குடியிருப்புப் பகுதிகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால், சீல் வைக்கும் பணியை இந்து சமய அறநிலைத்துறை தற்காலிகமாக நிறுத்தினர்.
இந்த நிலையில், இன்று காலை 7.30 மணிமுதல் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், வர்த்தக கடைகளுக்கு சீல் வைக்க வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அழைத்து இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கணபதி முருகன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக நிர்வாகி முத்துக்குமாரசாமி மற்றும் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.
குடியிருப்புகளுக்கு தாங்கள் நடவடிக்கைகள் எடுக்க வரவில்லை என்றும், வர்த்தக கடைகளுக்குதான் சீல் வைக்க வந்திருப்பதாக அதிகாரிகளும், தங்களுக்கு காலஅவகாசம் கொடுக்காமல் வாராவாரம் சீல் வைக்கும் நடவடிக்கைகள் நடைபெறுவதால் மன உளைச்சல் ஏற்படுவதால், நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர அவகாசம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தற்போது வரை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறும் இந்த பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து பொதுமக்கள் வெண்ணைமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயில் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பாதுகாப்பு பணிக்காக கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.