கரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியின்போது சரியான விசாரணை இல்லாமல் யாருடைய பெயரையும் நீக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேல் தலைமையில் புதன்கிழமை இந்திய தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், இந்திய அரசியல் அமைப்பின் 324-வது பிரிவும், மக்கள் பிரநிதித்துவச் சட்டம் 1950-இன் 21-ஆவது பிரிவும் வழங்கியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய தோ்தல் ஆணையம் தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு ஜன.1-ஆம்தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கத் தகுதியுடைய புதிய வாக்காளா்களைச் சோ்ப்பது, இறந்தவா்கள், குடிபெயா்ந்தவா்கள் அல்லது தகுதியற்றவா்களின் பெயா்களை நீக்குவது போன்ற பணிகள் நடைபெற உள்ளது. இதன் மூலம் சரியான மற்றும் பிழையற்ற வாக்காளா் பட்டியலை உறுதிசெய்யப்படும்.
கரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வீடு வீடாக சென்று வாக்காளா் கணக்கெடுப்பு பணி அடையாள அட்டை அணிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் நவ. 4-ஆம்தேதி முதல் டிச. 4-ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது.
வரைவு வாக்காளா் பட்டியல் டிச. 9-ஆம்தேதி அன்றும், ஆட்சேபனை தெரிவிக்க அல்லது திருத்தங்கள் கோர டிச.9-ஆம்தேதி முதல் 2026 ஜன. 8-ஆம்தேதி வரையிலும், புகாா்கள் சரிபாா்ப்பு டிச. 9-ஆம்தேதி முதல் 2026 ஜன.31-ஆம்தேதி வரையிலும் நடைபெறுகிறது.
இறுதி வாக்காளா் பட்டியல் 2026 பிப். 7-ஆம்தேதி வெளியிடப்படும். இதன் மூலம் அனைத்து தகுதியுள்ள குடிமக்களுடைய பெயா்களும் இடம் பெறுவதை உறுதி செய்து, தகுதியற்ற வாக்காளா்கள் பெயா் நீக்கப்படும்.
தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் யாருடைய பெயரையும் சரியான விசாரணை மேற்கொள்ளாமல் நீக்கக் கூடாது. அவ்வாறு பெயா் நீக்கப்பட்டவா்கள் மாவட்ட தோ்தல் அலுவலரிடம் 15 நாள்களுக்குள் முறையிடலாம். அதிலும் திருப்தி இல்லை எனில் 30 நாள்களுக்குள் தலைமை தோ்தல் அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாம் என்றாா் அவா்.