சாரணர் இயக்க ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
பெரம்பலூர் மாவட்ட சாரண, சாரணியர் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம், பெரம்பலூர் மாவட்ட பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட சாரண, சாரணியர் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம், பெரம்பலூர் மாவட்ட பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி பேசியது: பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலுக்கிணங்க, அனைத்துப் பள்ளிகளிலும் சாரண, சாரணியர் இயக்கம் தொடங்க வேண்டும். சாரணர் இயக்க மாணவர்கள் அதிக அளவில் ராஜ்யபுரஸ்கார் விருது மற்றும் ராஸ்டிரபதி விருது பெறுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் அவர். இதில், மாவட்டச் செயலர் க. செல்வராஜ், சாரணிய பயிற்சி ஆணையர் தனலட்சுமி, மாவட்ட உதவி செயலர் தனபால், மாவட்ட அமைப்பு ஆணையர்கள் சரோஜா, சந்திரசேகர் ஆகியோர் சாரண இயக்க அடிப்படைகள், சாரணர் முன்னேற்றப்படி நிலைகள், இயக்கப் பாடல்கள், உறுதிமொழி, சட்டம், சாரண ஆசிரியர்களின் கடமைகள், அணிமுறைப் பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.
மாவட்ட கல்வி அலுவலர் வெ. பிருதிவிராஜன் முன்னிலையில் நடைபெற்ற இப்பயிற்சியில் மொத்தம் 73 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் குணாளன், துரை, ஜான்சிராணி, குகனேஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.