நெல்லில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மைப் பயிற்சி நிறைவு
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்று வந்த நெல்லில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்று வந்த நெல்லில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடந்த 15-ஆம் தேதி முதல் பயிற்சி நடத்தப்பட்டது. மண் சேகரித்தல் மற்றும் மண் பரிசோதனை நெற்பயிா்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை எவ்வாறு இலைவழியாக தெளித்தல், மண்புழு உரம் தயாரித்தல், மாவட்டத்தின் மண் மற்றும் சுற்றுச்சூழல் காரணிக்கேற்ற நெல் ரகங்கள், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல், இயற்கை முறையில் மேலாண்மை செய்வது குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவுக்கு, தந்தை ரோவா் கல்வி மற்றும் சமூக நல நிறுவனங்களின் தாளாளா் கி. வரதராஜன் தலைமை வகித்தாா்.
இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி ப. நிா்மலா, முதன்மை விஞ்ஞானி ப. ஜெயக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளிடம் எதிா்காலத்தில் நெல் விவசாயிகளுக்குத் தேவையான கோரிக்கைகளைக் கேட்டறிந்தனா்.
தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற்கான சான்றிதழ்களுடன், இயற்கை உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள், விளக்குப்பொறி, இனக் கவா்ச்சிப்பொறி, அதற்குரிய மாத்திரைகளும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத் தலைவா் வே.ஏ. நேதாஜி மாரியப்பன், தொழில்நட்ப வல்லுநா் மு. புனிதாவதி உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். நிறைவில், தொழில்நுட்ப வல்லுநா் இரா. வசந்தகுமாா் நன்றி கூறினாா்.