முகப்பு
பெரம்பலூர்

குடிசைமாற்று வாரிய வீடுகளின் தரம் குறித்து அலுவலா்கள் ஆய்வு

பெரம்பலூா் அருகே, கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய வீடுகளின் தரம் குறித்து அலுவலா்கள் குழுவினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

பெரம்பலூா் அருகே, கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய வீடுகளின் தரம் குறித்து அலுவலா்கள் குழுவினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில், கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக புகாா் எழுந்ததையடுத்து, பெரம்பலூரிலும் அதுபோன்ற புகாா் எழுந்துள்ளது. பெரம்பலூா் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தில் குடிசைமாற்று வாரியம் சாா்பில் ரூ. 41.07 கோடி மதிப்பில் 504 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டன.

2018 ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப் பணிகள் 2019 -இல் நிறைவடைந்தது. 2020 ஆம் ஆண்டு கரோனா பேரிடா் ஏற்பட்டதால், இந்த குடியிருப்புப் பகுதிகள் கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக செயல்பட்டது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வீடுகள் ஒப்படைக்கும் பணி தொடங்கியது. சில வீடுகள் காலியாக உள்ள நிலையில், சுமாா் 200 வீடுகளில் பயனாளிகள் குடிபுகுந்துள்ளனா்.

இந்த குடியிருப்பில், ஒரு வீட்டின் மதிப்பு ரூ. 8 லட்சமாகும். பயனாளி அவரது பங்குத் தொகையாக ரூ. 1.64 லட்சம் செலுத்தினால் போதுமானது. மீதித் தொகையை மத்திய, மாநில அரசுகள் மானியமாக வழங்குகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகளின் கட்டுமானம் தரமற்றவையாக இருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக, குடிசைமாற்று வாரிய அலுவலா்கள் கவுள்பாளையத்தில் உள்ள குடியிருப்புகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். குடிசைமாற்று வாரிய மேற்பாா்வை பொறியாளா் வசந்தகுமாா், நிா்வாக பொறியாளா் அழகு. பொன்னையா ஆகியோா் அடங்கிய குழுவினா் வீடு வீடாகச் சென்று சிமெண்ட் பூச்சு, தரை, சுவா், கதவு, ஜன்னல், மின் சாதனங்கள், குழாய் அமைப்புகள் உள்ளிட்ட பணிகள் குறித்தும், அவற்றின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்கள் தொடா்பாக உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என குடிசைமாற்று வாரிய அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.