பெரம்பலூரில் சாலை பாதுகாப்பு மாத விழா தொடக்கம்
சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தை ஆட்சியா் தொடக்கி வைத்தாா்.
சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, பிரசாரத்தை ஆட்சியா் ப.ஸ்ரீ வெங்கட பிரியா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
தொடக்க விழாவையொட்டி, போக்குவரத்து விதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பதாகைகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களிடம் ஆட்சியா் வெங்கட பிரியா வழங்கினாா்.
சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளை பாா்வையிட்ட ஆட்சியா் கூறியது:
தமிழக அரசு சாா்பில் சாலை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக சாலை பாதுகாப்பு மாத விழா ஜன. 18 முதல் பிப். 17 ஆம் தேதி வரை ‘சாலை பாதுகாப்பு உயிா் பாதுகாப்பு’ என்ற அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வாகன ஓட்டுநா்கள் முறையாக சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் விபத்தில்லா சாலை போக்குவரத்து சாத்தியமாகும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து ஆய்வாளா் செல்வக்குமாா், நகராட்சி ஆணையா் குமரி மன்னன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.