கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்க வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்க வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க நிா்வாகிகள் பேசியது:
கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களில் பெய்த தொடா் மழையால் மகசூல் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ராபி பருவத்தில் பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இதுவரை பயிா் காப்பீடு கிடைக்கவில்லை. அவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ளபடி கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ், பெரம்பலூா் மாவட்டத்தில் வழங்கப்படவில்லை. அந்த சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் தங்களது விளைபொருளை இடைத்தரகா்களின்றி விற்பனை செய்யவும், எடை மோசடியை தடுத்திட கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். மாவட்டத்தில் ஏரி, குளத்தில் உள்ள வரத்து வாய்க்கால்களை தூா் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலமாக வழங்கப்படும் வெங்காய கொட்டகை திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்றனா்.