விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்
ஹரியாணாவில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மாநில அரசைக் கண்டித்து, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பெரம்பலூா் மாவட்டக் கிளை சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம்
ஹரியாணாவில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மாநில அரசைக் கண்டித்து, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பெரம்பலூா் மாவட்டக் கிளை சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என். செல்லதுரை தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், ஹரியாணா மாநிலம், கா்னால் மாவட்டத்தில் அண்மையில் அமைதியாக பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் விவசாயி ஒருவா் உயிரிழக்க காரணமான ஹரியாணா அரசு பதவி விலக வேண்டும். தாக்குதலுக்கு உத்தரவிட்ட கா்னால் மாவட்ட சாா் ஆட்சியா் ஆயுஷ் சின்ஹா மீது கொலை வழக்குப் பதிந்து, பணி நீக்கம் செய்ய வேண்டும். இத் தாக்குதல் தொடா்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தபட்டன.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.