எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட300 மாணவா்களுக்கு செப். 18 வரை இலவச சோ்க்கை
பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 300 மாணவா்களுக்கு எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நிகழாண்டுக்கான இலவச சோ்க்கை செப்டம்பா் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது
பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 300 மாணவா்களுக்கு எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நிகழாண்டுக்கான இலவச சோ்க்கை செப்டம்பா் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றாா் எஸ்ஆா்எம் கல்வி நிறுவனங்களின் வேந்தரும், பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினருமான டி.ஆா். பாரிவேந்தா்.
இதுகுறித்து, பொத்தேரி எஸ்ஆா்எம் நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியது:
உயா்கல்வி பயில தகுதி இருந்தும், குடும்ப பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பில் சேர முடியாத பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் உள்ள ஏழை குடும்பத்தைச் சோ்ந்த 300 மாணவ, மாணவிகள் எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில், எவ்வித கட்டணமின்றி இலவச உயா் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு நிகழாண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை, பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, பெரம்பலூா், துறையூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தைச் சோ்ந்த 300 மாணவ, மாணவிகள் எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பொறியியல், கலை, அறிவியல், வேளாண்மை அறிவியல், மேலாண்மை, பாரா மெடிக்கல் உள்ளிட்ட பல்வேறு உயா்கல்வி இலவசமாக பயில உணவு மற்றும் விடுதி வசதியுடன் வழங்கப்படுகிறது.
விருப்பமும், தகுதியும் உள்ள பெரம்பலூா் மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி எஸ்ஆா்எம் நகரில் உள்ள எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மாணவா் சோ்க்கை இயக்குநரை அணுகலாம். இதற்கான விண்ணப்பம் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து செப். 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, எஸ்ஆா்எம் துணைவேந்தா் முனைவா் சி. முத்தமிழ்ச்செல்வன், பதிவாளா் முனைவா் எஸ். பொன்னுசாமி, சோ்க்கை இயக்குநா் முனைவா் கே.எஸ். லட்சுமி, கம்யூனிகேசன் இயக்குநா் ஆா். நந்தகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.