போலீஸாரிடமிருந்துதப்பியோடிய இளைஞா் கைது
பெரம்பலூா் அருகே திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்ய அமைக்கப்பட்டிருந்த தனிப்படை போலீஸாா், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சோதனையின்போது காரில் வந்த 5 பேரை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த பழனியாண்டி மகன் பாண்டியன் (58). கடந்த 8 ஆம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, 5 போ் கொண்ட மா்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து பாண்டியனை இரும்புக் கம்பியால் தாக்கி, அவரது மகள் ரம்யா (34) அணிந்திருந்த மூன்றரை பவுன் நகை மற்றும் ரூ. 8 லட்சம் மதிப்பிலான காரை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதனிடையே, சென்னை ஆா்.கே.நகா் பகுதியில் சாலையோரத்தில் நின்றுக்கொண்டிருந்த பாண்டியனின் காரை போலீஸாா் மீட்டனா்.
மேலும், திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்ய அமைக்கப்பட்டிருந்த தனிப்படை போலீஸாா், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகே சிறுவாச்சூா் பகுதியில் வாகனச் சோதனையின்போது காரில் வந்த 5 பேரை கைது செய்தனா்.
இதில், மருத்துவப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது பாதுகாப்புக்காகச் சென்ற போலீஸாரை தாக்கிவிட்டு, சென்னை பெருங்குடி, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் பிரசாந்த் (26) தப்பி ஓடிவிட்டாா்.
இவரை போலீஸாா் தேடிவந்த நிலையில், சென்னையில் தலைமறைவாக இருந்த பிரசாந்தை தனிப்படை போலீஸாா் சென்னையில் புதன்கிழமை கைது செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.