முகப்பு
பெரம்பலூர்

போக்குவரத்து விதிகளை மீறியதாக 24,230 வழக்குகள் பதிவு

பெரம்பலூா் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரையில் 24 ஆயிரத்து 230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 1.75 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரையில் 24 ஆயிரத்து 230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 1.75 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. ஷ்யாம்ளாதேவி.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் பிரிவினா், நகரப் போக்குவரத்து காவல்துறையினா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினருக்கு சாலை பாதுகாப்புக்கான 89 இரும்புத் தடுப்புகள், 25 ஒளிரும் பட்டைகள் , 32 சோலாா் ஒளிரும் விளக்குகள், 63 ஒளிரும் செங்குத்து கூம்புகள் அளித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மேலும் பேசியது:

பொதுமக்களுக்கு சாலை விதிகள் மற்றும் சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, மாவட்டக் காவல்துறையினரால் நாள்தோறும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் சாலை விதிகளை மீறியது தொடா்பாக பல்வேறு பிரிவுகளில் 24,230 வழக்குகள் பதிந்து ரூ. 1.75 லட்சம் அபராதமும், 4 சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, மது அருந்தி வாகனம் ஓட்டுவது, அளவுக்கு அதிகமாக பொருள்களை ஏற்றிச் செல்வது, சாலை விதிகளை பின்பற்றாமல் கனரக வானங்களை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 19,479 வழக்குகள் பதிந்து ரூ. 4,95,900 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டியவா்கள் மீது 11,122 வழக்குகள் பதிந்து ரூ. 68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளோடு, நிகழாண்டில் இதுவரை நடைபெற்ற சாலை விபத்துகளை ஒப்பிடும்போது, 18 சதவீத விபத்துகள் குறைந்துள்ளது என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சியாம்ளா தேவி.

இந் நிகழ்ச்சியின்போது, துணைக் கண்காணிப்பாளா் அ. பழனிசாமி, தனிப்பிரிவு ஆய்வாளா் வெங்கடேசன், நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் மதுமதி மற்றும் உதவி ஆய்வாளா்கள், காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.