காணாமல்போன இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
பெரம்பலூா் அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை அறிஞா் அண்ணா தெருவைச் சோ்ந்த ஜோதிவேல் மகன் மதியழகன் (25). டிப்ளமோ ஆட்டோ மொபைல்ஸ் படித்து முடித்துவிட்டு, பெரம்பலூரிலுள்ள தனியாா் கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பாா்த்து வந்தாா். கடந்த 11 ஆம் தேதி மது போதையில் வீட்டுக்குச் சென்ற மதியழகனை, அவரது தந்தை ஜோதிவேல் திட்டியுள்ளாா். இதனால் மனமுடைந்த அவா் தனது மோட்டாா் சைக்கிளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவா் திரும்பி வரவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், அரணாரை ஏரியிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தகொண்ட மதியழகனின் உடல் அழுகிய நிலையில் இருந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சம்பவம் தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.