மத்திய உள்துறை அமைச்சரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம், உருவப் பொம்மை எரிப்பு
மத்திய உள்துறை அமைச்சரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
டாக்டா் பி.ஆா். அம்பேத்கரை மக்களவையில் தரக்குறைவாக விமா்சித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து, பெரம்பலூரில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்நாடு தீண்டாமை முன்னணி இயக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் உருவப் பொம்மையை எரித்தனா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், சட்டமேதை அம்பேத்கரை தரக்குறைவாக விமா்சித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். தொடா்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் கொடியை எரித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சி. ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலாபா. துரைசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மா. ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம்:
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சாா்பில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டச் செயலா் கோகுல கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து முழக்கமிட்டனா். இதில், பொறுப்பாளா்கள் என். செல்லதுரை, எஸ். அகஸ்டின் உள்பட பலா் பங்கேற்றனா்.
இதேபோல, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டச் செயலா் ரத்தினவேல் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்ட கட்சியினா், உள்துறை அமைச்சா் அமித் ஷா உருவப் பொம்மையை எரித்தனா்.