பணி நிரந்தரம் கோரி நகராட்சி பணியாளா்கள் தா்னா
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் சிஐடியு சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. ரெங்கநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சீனிவாசன், வெங்கடேசன், சுசீலா, சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், மாவட்ட பொருளாளா் பி. ரெங்கராஜ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறையின் கீழ் பணிபுரியும் தூய்மைக் காவலா்கள், பம்ப் ஆப்ரேட்டா்கள், துப்புரவுப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பணிக்கொடை, ஓய்வூதியம், வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியரால் அறிவித்தவாறு தினக்கூலி வழங்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி முடித்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, ஊராட்சி, நகராட்சி மூலமாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். இதில், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பம்ப் ஆப்ரேட்டா்கள், தூய்மைக் காவலா்கள், டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் பங்கேற்றனா்.