கழிவுநீா் வடிகால் கோரி கிராம மக்கள் மறியல் முயற்சி
பெரம்பலூா் அருகே கழிவுநீா் கால்வாய் அமைத்து தரக் கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களைப் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
பெரம்பலூா் அருகே கழிவுநீா் கால்வாய் அமைத்து தரக் கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களைப் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில் முறையான வடிகால் வசதியில்லாததால், அப் பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், ஆங்காங்கே கழிவுநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால், இச் சாலை வழியே பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். இதுதொடா்பாக, அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சித் தலைவா், வட்டார வளா்ச்சி அலுவலா், மாவட்ட ஆட்சியா், சட்டப் பேரவை உறுப்பினரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த, அப்பகுதி மக்கள் பெரம்பலூா் - அரியலூா் சாலையில், குன்னம் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், சில தினங்களில் கழிவுநீா் வடிகால் கட்டித் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.