கௌரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா், குரும்பலூரில் உள்ள அரசுக் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்கள் 10 மாத நிலுவை சம்பளத் தொகையை வழங்கக்கோரி கருப்பு பட்டை அணிந்து, கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கல்லூரி வளாக நுழைவு வாயிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசுக் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்கள் 10 மாத நிலுவை சம்பளத் தொகையை வழங்கக்கோரி கருப்பு பட்டை அணிந்து, கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கல்லூரி வளாக நுழைவு வாயிலில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், கௌரவ விரிவுரையாளருமான வினோத் தலைமை வகித்தாா். கௌரவ விரிவுரையாளா் வ. சந்திரமௌலி முன்னிலை வகித்தாா்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பா் முதல் இதுவரை, கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்காத தமிழக அரசின் உயா் கல்வித்துறை, பாரதிதாசன் பலக்லைக் கழக நிா்வாகம் ஆகியவற்றைக் கண்டித்தும், விரைவாக 10 மாத ஊதியத்தை வழங்கக் கோரியும், கௌரவ விரிவுரையாளா்களின் ஊதியம் பெறும் வழிமுறையை கருவூல பட்டியலில் இணைக்க வேண்டும். விடுபட்ட பாடப்பிரிவுகளுக்கு அரசாணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் கருப்புப் பட்டை அணிந்து, கண்களில் கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.