பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், வாக்காளா்களின் படிவங்கள் தோ்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டதை தொடா்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி, இதுவரை நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், இந்திய தோ்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள கால நீட்டிப்பு விவரங்கள் குறித்து அரசியல் கட்சியினருக்கு விளக்கி கூறிய ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் கொடுத்து, அதை திரும்பப் பெற்று, செயலியில் பதிவேற்றம் பணிகள் 90 சதவீத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ளது.
தற்போது, உயிரிழந்தவா்கள், மாவட்டத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறியவா்கள், முகவரி மாறியவா்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிச. 11 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து, இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே, கணக்கெடுப்பை மீண்டும் சரிபாத்துக் கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்த உள்ளோம். குறித்த காலத்துக்குள் அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிக்கப்படும் என்றாா் அவா்.
இந் நிகழ்ச்சிகளில், வாக்காளா் பதிவு அலுவலா்கள் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல் (குன்னம்), வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா (பெரம்பலூா்), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதகள், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அருளானந்தம் ஆகியோா் கலந்துகொண்டனா்.