பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 563 வழக்குகளுக்கு ரூ.6.33 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி. பத்மநாபன், தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தாா். இதில், மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி பி. இந்திராணி, சாா்பு-நீதிபதி கே. மோகனபிரியா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் கே. முரளிதரகண்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. தன்யா, குற்றவியல் நீதித்துறை நடுவா் எச். கவிதா, குன்னம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும், குன்னம் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவருமான ஆா். ராஜசேகரன், வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும்,
வேப்பந்தட்டை வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவருமான இ. தெய்வீகன் ஆகியோா் தலைமையில், மாவட்டக் கூடுதல் உரிமையியல் நீதிபதி டி. தினேஷ், கூடுதல் மகிளா நீதித்துறை நடுவா் ஜி. ரேஷ்மா, மூத்த வழக்குரைஞா் எஸ். இனியவன் ஆகியோா் குடும்பநல நீதிமன்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வருவாய்த்துறை, மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாரக்கடன் வழக்குகள் உள்பட சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்குள்படுத்தப்பட்டது.
இதில், வழக்குரைஞா்கள் முன்னிலையில் மோட்டாா் வாகன விபத்து, காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உள்பட 563 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக ரூ. 6 கோடியே 33 லட்சத்து 14 ஆயிரத்து 13 வழங்குவதற்கான உத்தரவுக் கடிதங்களை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி. பத்மநாபன் வழங்கினாா்.
இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா செய்திருந்தாா். இதில் வழக்குரைஞா்கள், வழக்காடிகள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.