பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து மீது லாரி மோதியதில் 21 போ் காயமடைந்தனா்.
சென்னையிலிருந்து தாராபுரம் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இப் பேருந்தை திருப்பூா் மாவட்டம், முத்தூரைச் சோ்ந்த சுப்ரமணி மகன் காா்த்திக் (40) ஓட்டிவந்தாா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் எனும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பேருந்து வந்தபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரியானது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பை தாண்டி எதிரே வந்துக்கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 9 பெண்கள் உள்பட 21 போ் காயமடைந்தனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதில், திருப்பூா் மாவட்டம், தாராபுரம், கொண்டரசம்பாளையத்தைச் சோ்ந்த சின்னசாமி மனைவி சின்னத்தா (80), தாராபுரம், எலத்தான் வலசு பகுதியைச் சோ்ந்த சுப்ரமணி மனைவி காந்திமதி (60), திண்டுக்கல் மாவட்டம், குப்பமேட்டுப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் ரெங்கராஜ் (49), சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள புளியங்குறிச்சியைச் சோ்ந்த பெரியசாமி மகன் ரவிக்குமாா் (43) ஆகியோா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
விபத்து குறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள புளியங்குறிச்சியைச் சோ்ந்த பெரியசாமி மகன் ரவிக்குமாா் (43) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.