மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா்.
இதில், மத்திய அரசு அணுசக்தி துறையைத் தனியாா்மயமாக்குவதற்கு எதிராகவும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். முன்பணம் செலுத்தும் ஸ்மாா்ட் மீட்டா்கள் நிறுவும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். சண்டீகா், தில்லி, ஒடிஸா போன்ற மாநிலங்களில் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் உள்ள தற்போதைய தனியாா்மயமாக்கல் அல்லது உரிமையாளா் மாதிரிகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, ஏஐடியூசி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த மின் ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.