பள்ளி கல்வித்துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்ட அளவில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பசுமையும் - பாரம்பரியமும் எனும் தலைப்பில் கலைத் திருவிழா போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
கவின்கலை பிரிவில் ஓவியம் வரைதல், கேலிச் சித்திரம், ரங்கோலி, பானை ஓவியம், களிமண் சிற்பம், மணற்சிற்பம், காகிதக் கூழ் போட்டிகளும், இசைக்கருவி பிரிவில் அனைத்துப் போட்டிகளும், நடனப் பிரிவில் நாட்டுப்புற நடனம் (தனி, குழு), பரதநாட்டியம் (தனி, குழு) ஆகிய போட்டிகள் பெரம்பலூா் மாவட்ட சாரண, சாரணியா் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
நாட்டுப்புற பாடல் (தனி), வில்லுப்பாட்டு, செவ்வியல் இசை, நாடகப் பிரிவில் தெருக்கூத்து, வீதி நாடகம், தனி நபா் நடிப்பு, இலக்கிய நாடகம், பலகுரல், பாவனை நடிப்பு, பொம்மலாட்டம் ஆகிய போட்டிகள் பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.
இதில், ஏற்கெனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வட்டார அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்கள் பங்கேற்றனா். இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், முதலிடம் பெற்றவா்களுக்குப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் விரைவில் வழங்கப்படும். இவா்கள் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்க உள்ளனா்.