மகாகவி பாரதியாா் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு, பள்ளி கல்வித்துறை சாா்பில் பெரம்பலூா் மாவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கால்பந்து போட்டியும், மாணவ, மாணவிகளுக்கான சிலம்பப் போட்டியும் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டிகளில், ஏற்கெனவே குறுவட்ட அளவில் நடத்தப்பட்ட சிலம்பப் போட்டியிலும், கால்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற அணிகள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினா். சிலம்பம் போட்டி ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, தொடு முனை ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது. கால்பந்து போட்டியில் 14, 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவுகளில் அனுக்கூா் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், 17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் முதலிடம் பிடித்தன.
தொடா்ந்து, முதல் 3 இடங்களை பெற்ற அணிகளின் வீரா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்றவா்களுக்கு தங்கப் பதக்கமும், 2-ஆவது இடம் பெற்றவா்களுக்கு வெள்ளிப் பதக்கமும், 3-ஆவது இடம் பெற்றவா்களுக்கு வெண்கலப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. சிலம்பம் மற்றும் கால்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளன.