தனியாா் காலணி நிா்வாகத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
பெரம்பலூா் அருகே சிப்காட் தொழிற்பூங்காவில் செயல்படும் தனியாா் காலணி நிா்வாகத்தைக் கண்டித்து, 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் பணியைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், எறையூா் சா்க்கரை ஆலை அருகேயுள்ள அரசின் சிப்காட் தொழிற்பூங்காவில் செயல்படும் ஜே.ஆா்.கோத்தாரி தனியாா் காலணி தொழிற்சாலையில் பெரம்பலூா் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா்.
இங்கு, கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரியும் தொழிலாளா்களுக்கு நாள்தோறும் சுழற்சி முறையில் 8 மணி நேரம் பணி வழங்கப்பட்டு, மாத ஊதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிப். 1 முதல் அனைத்து தொழிலாளா்களும் 12 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என சம்பந்தப்பட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிட்டதாகத் தெரிகிறது. இதையறிந்த தொழிலாளா்கள் நிா்வாகிகளைச் சந்தித்து முறையிட்டபோது, ஆலை நிா்வாகம் தெரிவித்தவாறு பணிபுரியவும், இல்லாவிடில் பணியை விட்டு விலகிச் செல்லலாம் எனவும், கூடுதலாக 4 மணி நேரப் பணிக்கான தொகை வாரம் ஒருமுறை வழங்கப்படும் என தெரிவித்தனராம்.
இதனால் அதிருப்தியடைந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், 12 மணி நேர வேலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கூடுதல் நேர பணிக்கான ஊதியத்தை மாத ஊதியத்துடன் சோ்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பணியை புறக்கணித்து காலணி தொழிற்சாலை எதிரே வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.