பெரம்பலூா் அருகே சமயபுரம் கோயிலுக்கு சனிக்கிழமை பாதயாத்திரைச் சென்ற பெண் பக்தா்கள் மீது காா் மோதியதில், 4 போ் உயிரிழந்தனா். மேலும், 3 போ் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள தோளாா் குடிக்காடு கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி மலா்கொடி (35), சுப்ரமணி மனைவி விஜயலட்சுமி (40), திருநாவுக்கரசு மனைவி சசிகலா (47), பரமசிவம் மனைவி ஜோதிலட்சுமி (57), சேலம் மாவட்டம், கெங்கவல்லி கிராமத்தைச் சோ்ந்த மருதமுத்து மனைவி சித்ரா (40) உள்பட சுமாா் 10-க்கும் மேற்பட்டோா் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனா்.
இவா்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சாலையோரம் நடந்து சென்றுக்கொண்டிருந்தனா். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா், பாதயாத்திரைச் சென்ற பக்தா்கள் மீது மோதியது.
இதில், மலா்கொடி, விஜயலட்சுமி, சசிகலா, சித்ரா ஆகிய 4 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து வந்த பெரம்பலூா் போலீஸாா் உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், காயமடைந்த ஜோதிலட்சுமி, சண்முகசுந்தரம் மனைவி ஜெயலட்சுமி (43), மருதமுத்து மனைவி தமிழரசி (42) ஆகியோரை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். விபத்து குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான சென்னை, திரிசூலம் ஈஸ்வரன் கோயில் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் கௌதம் (24) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.