ஜெயலலிதா பிறந்த நாள்- திமுக மாநில மாநாடு: அதிமுக, திமுக பிரசார மோதல்
முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளுக்காக புதுக்கோட்டையில் உள்ள பெரும்பாலான அரசு சுவர்களில் அதிமுகவினர் விளம்பரம் எழுதியுள்ளதால்
முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளுக்காக புதுக்கோட்டையில் உள்ள பெரும்பாலான அரசு சுவர்களில் அதிமுகவினர் விளம்பரம் எழுதியுள்ளதால், தங்களுக்கு இடம் கிடைக்காததால் எப்போதும் இல்லாத வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக சுவரில் திமுகவினர் மாநில மாநாட்டுக்கான விளம்பரப் பதாகைகளை வைத்து மாவட்ட நிர்வாகத்தை தர்மச்சங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சியின் நூற்றாண்டு விழாவுக்காக அரசு வழங்கிய ரூ. 50 கோடி சிறப்பு நிதியில் பல்வேறு பணிகளுடன் நகர்மன்றம், அரசு மருத்துவமனை, நகராட்சி இல்லம், அரசு மகளிர் கல்லூரி போன்ற அரசு சுவர்களில் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், அடையாளங்கள், முக்கியத் தலைவர்கள், கலாசாரச் சின்னங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
இத்தகைய நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அரசு மன்னர் கல்லூரி, மகளிர் கல்லூரியின் விளையாட்டுத்திடல், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுவர்களில் தமிழக முதல்வரின் 66-வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திருச்சியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள திமுக மாநில மாநாட்டுக்கு சுவர் விளம்பரம் செய்வதற்காக அக்கட்சியினர் நகரெங்கும் இடம் தேடினர். சில அரசு சுவர்களை தேடியபோது நகராட்சி மற்றும் அதிமுகவினரால் பயன்படுத்தப்பட்டுள்ளதால், சில இடங்களைத் தங்களுக்கு ஒதுக்குமாறு நகராட்சி நிர்வாகத்தை அணுகியும் உரிய பலன் கிடைக்கவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த திமுகவினர் புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் (ஜன. 11) தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுடன், சுவர் விளம்பரம் குறித்த முடிவையும் அறிவித்தனர்.
அதன்படி, விளம்பரம் எழுதப்படாத அரசு சுவரான மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் சுவரில் திமுக மாநாட்டுக்கு தொண்டர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை பதாகைகள் வைக்கப்பட்டன. பிறகு அவை அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்தால் அகற்றப்பட்டன. அரசின் சுவர்களில் விளம்பரம் செய்யத் தடை என்பது பொதுவிதி. ஆனால், புதுக்கோட்டையில் சுவரில் தங்களது கட்சியைப் பற்றி எழுதுவதற்கு அதிமுக, திமுக ஆகிய இரு கட்சியினருக்கும் இடைய பிரசார மோதல் வலுவடைந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின் போது இதுபோன்ற விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையத்தால் தடை விதிக்கப்படும் என்பதால், அதற்கு முன்பாக பொது இடங்களில் விளம்பரம் செய்துகொள்ள இரு கட்சியினரும் தீவிர முனைப்புக் காட்டி வருகின்றனர்.
அகற்றினாலும், தொடர்ச்சியாக மேலும் பொது இடங்களில் பதாகை வைக்க திமுகவினர் தீர்மானித்துள்ளனர். எனினும், வைக்கும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டால் பிரச்னை தீவிரம் அடையும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.