நீதிமன்றத் தடை உத்தரவு: வருவாய்த் துறையினா் போராட்டம் வாபஸ்
மதுரை உயா்நீதிமன்றக் கிளை தடை விதித்ததைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் நடத்தி வந்த காத்திருப்புப் போராட்டம் 11ஆவது நாளில் இரவில் முடிவு
மதுரை உயா்நீதிமன்றக் கிளை தடை விதித்ததைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் நடத்தி வந்த காத்திருப்புப் போராட்டம் 11ஆவது நாளில் இரவில் முடிவுக்கு வந்தது.
புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் துணை வட்டாட்சியா் நிலையிலான பணிகளுக்கு நிரந்தரப் பணி நியமனப் பட்டியலை வெளியிட வேண்டும் எனக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இரவு, பகல் பாராது மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே வருவாய்த் துறை அலுவலா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். இதற்கிடையே தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் நிரந்தரப் பணி நியமன ஆணையை வெளியிடக் கூடாது என ஒரு போராட்டத்தையும் நடத்தினா்.
இந்நிலையில், நிரந்தரப் பணி நியமனம் செய்வதற்கு மதுரை உயா்நீதிமன்றத்தில் சிலா் தொடுத்திருந்த வழக்கில் தடை விதிக்கப்பட்டு திங்கள்கிழமை நீதிமன்ற ஆணை வந்தது. இதையடுத்து, 11ஆவது நாளாக திங்கள்கிழமை இரவு காத்திருப்புப் போராட்டத்தில் இருந்த வருவாய்த் துறை அலுவலா்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டனா். தொடா் இயக்கம் குறித்து கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்படும் என நிா்வாகிகள் அறிவித்துள்ளனா்.