முகப்பு
புதுக்கோட்டை

அப்துல்கலாமின் நினைவாக தொடர்ந்து 275ஆவது வாரமாக மரக்கன்று நடவு செய்த இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அப்துல்கலாமின் நினைவாக விதைக்"கலாம்' அமைப்பினர் தொடர்ந்து 275ஆவது வாரமாக மரக்கன்று நடவு செய்தனர்.

Updated On : 30 நவம்பர், 2020 at 12:42 PM
புதுக்கோட்டையில் விதைக் 'கலாம்' அமைப்பினர்.
பகிர்:

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே. அப்துல்கலாமின் நினைவாக 150 இளைஞர்களால் தொடங்கப்பட்ட- விதைக்"கலாம்' அமைப்பினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வாரம் கூட தவறாமல், ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக மரக்கன்றுகள் நடவு செய்து வருகின்றனர். இதன் 275ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) ஆலங்குடி வீரடி விநாயகர் ஆலய வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

இளைஞர்கள் சரியாக இருக்கிறார்களா என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து அதற்கான நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துகள் வெளிப்படும். ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அரிதான பணிகளில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவும் வேண்டியிருக்கிறது. புதுக்கோட்டையில் இப்படியொரு இளைஞர் குழு 2015ஆம் ஆண்டு அப்துல்கலாம் மறைந்த அடுத்த மாதம் தொடங்கப்பட்டிருக்கிறது. விதைக்"கலாம்' என்ற பெயரிலான இந்தக் குழுவில் தலைவர், ஒருங்கிணைப்பாளர் யாரும் கிடையாது. 150 பேருமே உறுப்பினர்கள்தான்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு எங்காவது ஓரிடத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து கொண்டிருக்கிறார்கள், ஒரு வாரம் கூட தவறாமல். இதுதான் முக்கியம். இந்த வாரம் இப்பணிக்கு 275 ஆவது வாரம். ஆலங்குடி வீரடி விநாயகர் ஆலய வளாகத்தில் லயன்ஸ் சங்கத்தினருடன் இணைந்து 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து குழுவின் உறுப்பினர் பொறியாளர் எஸ். சையது இப்ராஹிம் கூறியது: அப்துல்கலாமின் நினைவை வெறும் நினைவஞ்சலி பதாகை வைத்து பலரும் முடித்துக் கொள்கிறார்கள். 

Advertisement

அப்படி நடத்த நாங்கள் விரும்பவில்லை. அவரது கனவுகளில் ஒன்றான மரக்கன்றுகள் நடவு செய்வதுதான் நிஜமான அஞ்சலியாகக் கருதினோம். ஒரு வாரம் கூட தவறாமல் குறைந்தபட்சம் 5 மரக்கன்றுகள் நடவு செய்வது எங்களின் இலக்கு. ஒரு வாரம் 1500 மரக்கன்றுகளையும் கூட நட்டிருக்கிறோம். முள்ளூர் அருகே பறவைத்தோப்பு என்ற ஊரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நட்ட அந்தக் கன்றுகள் தற்போது ஒரு குறுங்காடாக வளர்ந்திருக்கிறது. எங்களுக்குள்ளேயே நிதியையும் பகிர்ந்து கொள்வோம். யாரிடமும் நாங்களாக நிதி கேட்பதில்லை.

இணைந்து வரும் அமைப்பினர் நிதி கொடுத்தால் வாங்கிக் கொள்கிறோம். மூங்கில் பட்டைகளால் ஆன கூண்டுகளையே பயன்படுத்துகிறோம். சாலையோரங்களில் புங்கை, வேம்பு போன்ற நிழல் தரும் மரக்கன்றுகளையும், பலா, மா, நாவல், கொய்யா போன்ற பயன்தரும் பழமரக்கன்றுகளையும் நடவு செய்கிறோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது நேரில் சென்று பார்வையிடுகிறோம். ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கிறோம். எப்போது வரை இந்தப் பணி என்று கேட்டால் அதுகுறித்த இலக்கு எங்களுக்குக் கிடையாது.

இது அப்துல்கலாமுக்கு செய்யும் நீண்டகால அஞ்சலி என்றார் சையது இப்ராஹிம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.