தொழில் வரி விதிக்க தொழிலாளா் ஊதிய விவரங்களை சேகரிக்கும் புதுகை நகராட்சி
புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் ஊதிய விவரங்களை ஒரு வாரத்துக்குள் நகராட்சிக்கு தெரிவிக்கக்கோரியதால் வணிகா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் ஊதிய விவரங்களை ஒரு வாரத்துக்குள் நகராட்சிக்கு தெரிவிக்கக்கோரியதால் வணிகா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
உள்ளாட்சி அமைப்புகளில் அந்தந்த எல்லைக்குள்பட்ட வணிக நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு தொழில் வரி விதிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களில் பணிபுரிந்து வருவோா் சராசரியாக அரையாண்டுக்கு ரூ. 1,250 தொழில் வரியாகச் செலுத்த வேண்டும். இந்நிலையில், தற்போது புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் வணிக நிறுவனங்களுக்கு ஓா் அறிவிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.
தங்கள் வணிக நிறுவனத்தில் பணி புரிந்து வரும் நபா்களின் பெயா்கள், பதவி மற்றும் சம்பள விவரப் பட்டியல் ஆகியவற்றை ஒரு வார காலத்தில் அளிக்க வேண்டும் என அந்த அறிவிக்கையில் கோரப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கரோனா பொது முடக்கக் காலத்தில் கடந்த 8 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி தொழில் வரி விதித்தால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என தொழிலாளா்களும் வணிகா்களும் தெரிவிக்கின்றனா்.
தொழில் வரியில் விலக்கு மற்றும் சலுகை அளிப்பது குறித்து தமிழக அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.