புதுகையில் பண விநியோகம் தொடா்பாக 10 வழக்குகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக தொடா்ந்து வரப்பெறும் புகாா்களை போலீஸாரும், பறக்கும் படையினரும் நேரில் சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இதன்படி, சனிக்கிழமை பகல் வரை மாவட்டம் முழுவதும் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக விராலிமலையில் 5 வழக்குகளும், அறந்தாங்கியில் 3 வழக்குகளும், கந்தா்வகோட்டையில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 181 வழக்குகள்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பிப். 26ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டு வருகின்றன. அனுமதியின்றி பிரசாரம், சுவரொட்டி ஒட்டுதல், சாலையில் பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி, மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை பகல் வரை 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் 81 வழக்குகளும், புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 40 வழக்குகளும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் 31 வழக்குகளும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 12 வழக்குகளும், கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 10 வழக்குகளும், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொடா்ந்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வேட்பாளா்களும் அரசியல் கட்சியினரும் விதிமுறைகளை கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.