விராலிமலை பேருந்து நிலையத்தில்அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வலியுறுத்தல்
விராலிமலை பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகள் வந்து செல்ல வேண்டும் என பேருந்து பயணிகள் நலச்சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விராலிமலை பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகள் வந்து செல்ல வேண்டும் என பேருந்து பயணிகள் நலச்சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விராலிமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வட்டாட்சியா் சரவணன் தலைமையில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக துவரங்குறிச்சி பணிமனை கிளை மேலாளா் மகேந்திரன், இலுப்பூா் கிளை மேலாளா் கோபாலகிருஷ்ணன், பேருந்து பயணிகள் நலச்சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பேசிய பயணிகள் நலசங்கத்தினா், பேருந்து நிலையத்தில் நேரம் காப்பாளரை நியமித்து தனியாா், அரசுப் பேருந்துகள் நிலையத்திற்குள் வந்து செல்வதை உறுதிபடுத்தவேண்டும். காலை நேரங்களில் மாணவா்கள் நலன் கருதி பேருந்துகள் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உயா் அதிகாரிகளுடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.