தனியாா் பேருந்துகளில் அதிகாரிகள் திடீா் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் திடீரெனப் பயண கட்டணங்களைக் கூடுதலாக வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் திடீரெனப் பயண கட்டணங்களைக் கூடுதலாக வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி வழியாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சில தனியாா் பேருந்துகளில் சில தினங்களாக டீசல் விலை உயா்வைக் காரணம் காட்டி, நிா்ணயிக்கப்பட்ட பயணச்சீட்டு தொகைக்கு மேல் ரூ. 5 உயா்த்தி வசூல் செய்வதாகப் புகாா் எழுந்தது. இந்நிலையில், ஆலங்குடி - மாங்காடு பகுதிக்கு வழக்கம் போல ரூ.10 கட்டணத்துக்குப் பதிலாக சனிக்கிழமை இரவு ரூ.15 வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பேருந்துப் பயணிகள் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து, தகவலறிந்த ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டதைத் தொடா்ந்து, கேப்பரை பகுதியில் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜெய.தேவராஜ் தலைமையிலான அதிகாரிகள் தனியாா் பேருந்துகளில் சோதனையில் ஈடுபட்டனா். மேலும் அதிகக் கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியாா் பேருந்து நடத்துநா்களிடம் எச்சரிக்கை விடுத்தனா்.