முகப்பு
புதுக்கோட்டை

நல்ல மனிதத்தைச் சொல்லித் தருவதே சிறந்த கல்வி: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

படிப்பு அறிவைத் தருவது மட்டுமல்ல, மனிதத்தை அன்பைக் கற்றுத் தருவதும் படிப்புதான் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்திலுள்ள சு.கதி. காந்தி உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டுத் தொடக்க விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்துார். அதில், 4 நூல்களை வெளியிட்டு அவர் மேலும் பேசுகையில், "எல்லா உறவுகளும் நம்மை விட்டுச் செல்லும் என்றால், எந்தக் காலத்திலும் நம்மைவிட்டுச் செல்லாத உறவு புத்தகங்கள். 

உன் முன் தலைகுனிந்ததால்தான் நான் பலர் முன்பு தலைநிமிர்ந்து நிற்கிறேன் என புத்தகங்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். 

'நல்ல அம்மா', 'நல்ல அப்பா' என்ற ஆகப்பெரிய பட்டத்தை எந்தப் பல்கலைக்கழகமும் நமக்குத் தரப்போவதில்லை. நாம் வளர்க்கும் குழந்தைகள்தான் அந்தப் பட்டங்களை நமக்குத் தருவார்கள்.

போலந்து நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளைத் தீயில் போட்டுக் கொன்று விடுவது என்று அந்த அரசு முடிவு செய்தபோது. குழந்தைகள் கவலைப்படாமல் இருக்க அவர்களோடு இணைந்து ஆடல் பாடல்களோடு ஆடிப்பாடினான் ஒரு போதகன். அதனால், அந்தப் போதகனையும் தீயில் போட்டுக் கொன்றார்கள். 

'குழந்தைகளுக்கு இதயத்தைக் கொடுங்கள்' என்று கூறியவன் சோவியத் சிந்தனையாளன் சுகோம்லின்ஸ்கி. குழந்தைகளுக்குத் தரப்படும் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்றால், ரோஜா மலரின் இதழ்களுக்கும், அதன் மீதுள்ள பனித்துளிக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ரோஜாவைப் பறிப்பதைப் போல இருக்க வேண்டும்.

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் சிக்கி தீயில் கருகி உயிர் போகும் தருணத்திலும் கூட, என் தோழிகளையும் காப்பாற்றுங்கள் எனக் கூறி சித்தப்பாவின் மடியிலேயே உயிர் பிரிந்தவர் தாரணிகா. குழந்தைகளின் இதயம் மென்மையானது மட்டுமல்ல, உயர்வானதும் கூட

மருத்துவராக, பொறியாளராக, வழக்குரைஞராக ஆக்குவது மட்டுமே கல்வியின் வேலையல்ல. குழந்தைகளை நல்ல மனிதர்களாக உருவாக்குவதே, அவர்களுக்கு நல்ல மனிதத்தைச் சொல்லித் தருவதே சிறந்த கல்வியாகும். படிப்பு அறிவைத் தருவது மட்டுமல்ல, மனிதத்தை அன்பைக் கற்றுத் தருவதும் படிப்புதான்.

பெரியவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கு அப்படி எந்த வாய்ப்பும் இப்போது வழங்கப்படுவதில்லை" என்றார்.

விழாவில், அழ. வள்ளியப்பா இணையதளத்தைத் தொடங்கி வைத்து கவிஞர் தங்கம் மூர்த்தி பேசுகையில், " எந்தக் குழந்தையும் இப்போது அம்மாவிடம் ஒரு கதை சொல்லக் கேட்க முடியாது. காரணம் குழந்தைகளுக்குச் சொல்வதற்கான கதைகள் அம்மாக்களுக்குத் தெரிந்திருப்பதில்லை. அவர்கள் தொலைக்காட்சித் தொடர்களின் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள். 

'தோசையம்மா தோசை..' என்ற குழந்தைப் பாடலில், அரிசி மாவும் உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசை என இட்லி தயாராவதற்கு என்னென்ன மூலப்பொருட்கள் தேவை என்பதை அழ. வள்ளியப்பா சொல்லித் தந்தார். 

இப்போதுள்ள குழந்தைகளுக்கு அரிசி என்றால் என்ன என்பதே தெரியாது. பச்சையரிசியும், புழுக்கல் அரிசியும் தனித்தனியே விளையும் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது நம்முடைய குழந்தைகளுக்கு செல்லமும், செல்போனும் கொடுத்துதான் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். 

முன்னொரு காலத்தில் 'பாசமலர்', 'சங்கு', 'டமாரம்' போன்ற குழந்தை இலக்கிய இதழ்களைக் கைகளில் எடுத்துச் செல்வது பெருமைக்குரிய ஒன்றாக இருந்தது. இப்போது கையில் செல்போன் இல்லாவிட்டால் ஏதோவொன்றைத் தொலைத்ததைப் போலத் தேடத் தொடங்கிவிட்டோம். குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோமே தவிர, குழந்தைகளைக் கொண்டாடுவதில்லை" என்றார்.

இதில், கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் செல்லகணபதி தொடக்கவுரை நிகழ்த்தினார். அரவிந்த் கண் மருத்துவமனையின் இயக்குநர் கோ. நாச்சியார் வாழ்த்துரை வழங்கினார். 

முழு கட்டுரையைப் படிக்க →