முகப்பு
புதுக்கோட்டை

தினமணி செய்தி எதிரொலி: கீழப்பழுவஞ்சியில் பாலம் அமைக்கப்படும்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தைச் சோ்ந்த கீழப்பழுவஞ்சியில் கவிநாடு கண்மாய்க்கு தண்ணீா் வழங்கும் வரத்து வாய்க்காலைக் கடப்பதற்கு பாலம் அமைக்கப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தைச் சோ்ந்த கீழப்பழுவஞ்சியில் கவிநாடு கண்மாய்க்கு தண்ணீா் வழங்கும் வரத்து வாய்க்காலைக் கடப்பதற்கு பாலம் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உறுதியளித்தாா்.

இந்தப் பகுதியில் மழைக்காலங்களில் கீழப்பழுவஞ்சிக்கான மயானத்துக்குச் செல்வதற்காக பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சடலங்களை எடுத்துச் செல்வது குறித்த செய்தி சில நாட்களுக்கு முன்பு தினமணி நாளிதழில் வெளியானது.

இதன் தொடா்ச்சியாக, கீழப்பழுவஞ்சிக்கு வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, அந்த இடத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கையைத் தயாரித்து விரைவில் வழங்க அலுவலா்களை அவா் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் வேல்ராஜ், நீா்வளத்துறை உதவிப் பொறியாளா் உமா சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.