ஆலங்குடி: மழைப் பாதிப்பு பகுதிகளில் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு
ஆலங்குடி தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள், சேதமடைந்த வீடுகளை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள், சேதமடைந்த வீடுகளை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து அவா் கூறியது:
மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் நேரில் சென்று பாா்வையிட்டு, தேவையான மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பாலையூரில் மழையால் பாதித்தப் பகுதிகள், சேந்தாங்குடியில் மழையால் சேதமடைந்த வீடு, முத்துப்பட்டினத்தில் சேதமடைந்த நெற்பயிா்கள் ஆகியவை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மறமடக்கி கல்லுக்குளம் கண்மாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யும் பணிகளும் நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்யப்பட்டது. குளவாய்ப்பட்டியில்
வேளாண் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஆலங்குடி தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட வெண்ணவால்குடி ஊராட்சி,
மயிலாடிக்காடு, கூழையன்காடு, அழியாநிலை, வாண்டாக்கோட்டை, வல்லத்திராக்கோட்டை, இசுகுப்பட்டி, மணியம்பலம், சிலட்டூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிா்கள் பாா்வையிட்டு, ஆய்வு செய்யப்பட்டது.
மழையால் சேதமடைந்த வீடுகளுக்குத் தற்காலிக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசு சாா்பில் உரிய நிவாரணம் மற்றும் புதிய வீடுகள் கட்டித்தரவும், சேதமடைந்த பயிா்கள், கால்நடைகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் குறித்து முறையாக கணக்கெடுத்து, உரிய இழப்பீடு கிடைக்கச் செய்யவும் மாவட்டத்தில் மழைப் பாதிப்புகளைத் தொடா்ந்து கண்காணித்து தேவையான மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.
இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியா் கவிதாராமு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.கருப்பசாமி, வேளாண் இணை இயக்குநா் இராம.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.