கீரனூா் அருகே கி.பி 9 ஆம் நூற்றாண்டு பாறைக் கல்வெட்டுகள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே வத்தனாக்குறிச்சியில், கி.பி 9ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாறைக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே வத்தனாக்குறிச்சியில், கி.பி 9ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாறைக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குளத்தூா் வட்டம், கீரனூா் அருகே வத்தனாக்குறிச்சி கிராமத்தில், ஆசிரியா் கண்ணதாசன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை பாண்டிய நாட்டுப் பண்பாட்டு மையத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியா்கள் து. முனீஸ்வரன், சி. செல்லபாண்டியன் தலைமையில், கீரனூரைச் சோ்ந்த ஆய்வாளா்கள் முருகபிரசாத், நாராயணமூா்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோா் கொண்ட குழு கள ஆய்வு மேற்கொண்டது.
ஒரே பாறையின் மேற்பரப்பில் இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இக்கல்வெட்டை மை படியெடுத்து ஆய்வு செய்தபோது அவை கி.பி 9 மற்றும் கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவை என்று அறியப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டைப் படியெடுத்து, ஆய்வு செய்த தொல்லியல் கள ஆய்வாளா் து. முனீஸ்வரன் கூறியது:
கீரனூா் வத்தனாக்குறிச்சி பகுதியில் தனிப்பாறையில் 2 அடி நீளம், 2 அடி அகலம் 5 வரி கொண்ட ஒரு கல்வெட்டில் ‘ஸ்ரீ இடைத்தி சாத்தங் குருன்தி சுனை இயிது’ ‘அழியாதி’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவை.
அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நீா் ஆதாரத்துக்காக, ‘சாத்தங் குருன்தி’ என்ற மன்னன், பாறையின் மேல் சுனையைக் குடைந்து, அச்சுனையை மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீா்ப் பயன்பாட்டுக்காக அளித்தமையைக் குறிக்கிறது. கல்வெட்டின், ஐந்தாம் வரி முற்றிலும் சிதிலமடைந்துள்ளது.
இதன் அருகே காணப்படும் மற்றொரு கல்வெட்டில் 6 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட 8 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவை. பெரும்பாலான எழுத்துகள் சிதிலமடைந்துள்ளதால், கல்வெட்டின் பொருளை அறிந்து கொள்ள முடியவில்லை.
இப்பாறைக் கல்வெட்டுகள், கிடைமட்டமாக பொறிக்கப்பட்டுள்ளதால், எழுத்துகள் முற்றிலுமாக அழிந்து போகும் நிலையில் உள்ளது. மேலும், இப்பாறைக் கல்வெட்டுகளின், வடபுறம் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட ஈமக் காடுகளும் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில், பல ஆண்டுகளுக்குப் பின் பாறைக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுனையைத் தானமாக அளித்த கல்வெட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில், வேறெங்கும் கண்டெடுத்ததாக இதுவரை அறியப்படவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் படியெடுத்திருந்தால், பூலாங்குறிச்சி கல்வெட்டினைப் போல் அரிய செய்தி கிடைத்திருக்க வாய்ப்புண்டு. இப்பாறைக் கல்வெட்டுகளுக்கு, மேற்கூரை அமைத்து சிதிலமடையாமல் தடுத்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றாா்.