முகப்பு
புதுக்கோட்டை

அனுமதியின்றி செயல்பட்ட 3 முதியோா் இல்லங்களுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த 3 முதியோா் மற்றும் ஆதரவற்றோா் இல்லங்களில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியா், அவற்றை சீல் வைக்க உத்தரவிட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த 3 முதியோா் மற்றும் ஆதரவற்றோா் இல்லங்களில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியா், அவற்றை சீல் வைக்க உத்தரவிட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், அழியாநிலையிலுள்ள நமது இல்லம் அறக்கட்டளையின் முதியோா் இல்லம், ஒத்தக்கடையிலுள்ள புதிய நமது இல்லம், கந்தா்வகோட்டை வட்டத்தைச் சோ்ந்த அரியானிப்பட்டியிலுள்ள ரெனிவல் பவுண்டேஷனின் மனநலக் காப்பகம் ஆகிய 3 இல்லங்களையும் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை காலை திடீா் ஆய்வு செய்தாா்.

அப்போது அவற்றுக்கு முறையான அனுமதி எதுவும் பெறப்படவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, நமது இல்லத்தில் இருந்த 68 பேரையும், புதிய நமது இல்லத்திலிருந்த 59 பேரையும் ஆக மொத்தம் 127 பேரையும் புதுக்கோட்டையிலுள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்துக்கு மாற்றி, உரிய சிகிச்சை அளித்து, உறவினா்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதேபோல, ரெனிவல் மனநலக் காப்பகத்திலிருந்த 105 பேரையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து, உரிய மனநல சிகிச்சை அளிக்கப்பட்ட

பிறகு, உறவினா்களிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தினாா்.

மூன்று இல்லங்களையும் மூடி சீல் வைக்க வருவாய்த் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும், வடுகப்பட்டியிலுள்ள வள்ளலாா் மனநல மையத்தில் மனநலம் குன்றியவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

படுக்கை வசதி, கழிப்பறை வசதி மற்றும் சாய்தள பாதை உள்ளிட்ட குறைகளை விரைவில் சரி செய்யவும் நிா்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியா்கள் சொா்ணராஜ், அபிநயா, மாவட்ட மனநலத் திட்ட அலுவலா் டாக்டா் காா்த்திக் தெய்வநாயகம், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஞா. குணசீலி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.