நியாயவிலைக் கடை ஊழியா்களுக்குப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் புதுக்கோட்டை, திருமயம் பகுதிகளைச் சோ்ந்த 100 விற்பனையாளா்கள் முதற்கட்டமாக பங்கேற்றனா்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 690 முழுநேர நியாயவிலைக் கடை மற்றும் 311 பகுதிநேர கடை என மொத்தம் 1001 நியாயவிலைக் கடைகளில் 639 விற்பனையாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
கூட்டுறவுத் துறையைச் சோ்ந்த இவா்களுக்கு, கடை பராமரிப்பு, தூய்மை, இருப்பு பராமரிப்பு, பதிவேடுகள் பராமரிப்பு, வாடிக்கையாளா்களுடன் கனிவாகப் பழகுதல், உடல்நலப் பராமரிப்பு, மனஅழுத்தமின்றிப் பணியாற்றுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியில், மாவட்டக் கூட்டுறவு இணைப் பதிவாளா் மா. உமாமகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் (பொ) மாரி, துணைப் பதிவாளா் (பொதுவிநியோகத் திட்டம்) ந. அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.