உள்ளாட்சிப் பணியாளர், உறவினர் வீடுகள், வணிக நிறுவனங்களில் சோதனை
ஊராட்சிகள் துறை அலுவலகப் பணியாளரின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவலர்கள் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டைஉள்ளாட்சிப் பணியாளர், உறவினர் வீடுகள், வணிக நிறுவனங்களில் சோதனை
ஊராட்சிகள் துறை அலுவலகப் பணியாளரின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவலர்கள் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊராட்சிகள் துறை அலுவலகப் பணியாளரின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவலர்கள் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி ஊராட்சியைச் சேர்ந்த கருக்காகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வி. முருகானந்தம் (47). இவர் வேப்பங்குடி ஊராட்சியில் எழுத்தர் பணியிடத்தில் இருந்து தற்போது ஊராட்சிகள் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காந்திமதி (38), முள்ளங்குறிச்சி ஊராட்சித் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணியுடன் தொடர்பு ஏற்பட்டு, அவர் மூலமாக அரசு ஒப்பந்தங்கள் எடுத்து செய்து வந்ததாகத் தெரிகிறது. கடந்த 2017 முதல் 2020ஆம் ஆண்டுக்குள் இவர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்ததாகவும், அந்தச் சொத்து முழுவதும் வருமானத்துக்கு அதிகமாக ஊழல் புரிந்து வாங்கப்பட்டவை என்ற புகார் எழுந்தது.
இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவலர்கள், முருகானந்தம் உள்ளிட்டோர் மீது கடந்த 28ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, முருகானந்தம் மற்றும் அவரது தம்பிகள் ரவிச்சந்திரன், ஒப்பந்ததாரர் பழனிவேலு ஆகியோரின் வீடுகளிலும், புதுக்கோட்டை நகரிலுள்ள இவர்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வணிகவளாகம், திரையரங்கம், தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களிலும் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவலர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து புதன்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட அந்த 3 ஆண்டுகாலத்தில் இவர்களது பெயரில் ரூ.15 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் வாங்கப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.