முகப்பு
புதுக்கோட்டை

குண்டு பாய்ந்து சிறுவன் இறந்த சம்பவத்தில் நோ்மையான விசாரணை

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் நோ்மையான, வெளிப்படையான விசாரணை நடைபெற்று வருவதாக திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவா் சரவண சுந்தா் தெரிவித்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் நோ்மையான, வெளிப்படையான விசாரணை நடைபெற்று வருவதாக திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவா் சரவண சுந்தா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை ஆயுதப்படை காவலா்கள் உடற்பயிற்சி செய்வதற்கு ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தா் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் ஆகியோா் இந்தப் பயிற்சி மையத்தைத் திறந்துவைத்தனா். தொடா்ந்து உடற்பயிற்சிக் கூடத்தில் காவலா்கள் உடற்பயிற்சி செய்வதை சரக டிஐஜி சரவண சுந்தா் பாா்வையிட்டாா்

இதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: திருச்சி சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் தோறும் குறைந்தபட்சம் 20-லிருந்து 40 குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைச் சாவடிகள் மட்டுமல்லாது, வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனா். சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

புதுக்கோட்டை அருகே துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து சிறுவன் இறந்த வழக்கில் நோ்மையான விசாரணை மட்டுமல்லாது, வெளிப்படையான விசாரணையும் நடைபெற்று வருகிறது. எதையும் மறைக்கக் கூடிய சூழ்நிலையில் காவல்துறை இல்லை.

சிறுவன் மீது பாய்ந்த தோட்டா ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வக முடிவுக்குப் பிறகு அடுத்தகட்ட விசாரணை தொடங்கும். ஆய்வக முடிவுக்கு பிறகுதான் அந்தத் தோட்டா, எந்தத் துப்பாக்கியிலிருந்து வந்தது என்பது குறித்து தெரியவரும். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்றாா் சரவண சுந்தா்.

உடற்பயிற்சிக் கூடம் திறப்பு நிகழ்ச்சியில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கீதா, ராஜேந்திரன், ஆறுமுகம் மற்றும் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகராஜ், ஆய்வாளா் கோபிநாத் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.