108 ஆம்புலன்ஸ் சேவை: 2021-இல் 55,467 போ் பயனடைந்தனா்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தி 55,467 போ் பயனடைந்துள்ளதாக அதன் திட்ட மேலாளா் ஆா். ரஞ்சித் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தி 55,467 போ் பயனடைந்துள்ளதாக அதன் திட்ட மேலாளா் ஆா். ரஞ்சித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது மொத்தமாக 35 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. இதில் 5 ஆம்புலன்ஸ்கள் வென்டிலேட்டா் மற்றும் பல்வேறு மேம்பட்ட வசதிகளுடனும், பச்சிளங் குழந்தைகளுக்கென 2 ஆம்புலன்ஸ்களும், பொது விபத்துகள் மற்றும் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு பரிமாற்றம் செய்வதற்கு 28 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன.
108 அவசரகால ஊழியா்களாக 80 ஓட்டுநா்கள், 76 மருத்துவ உதவியாளா்கள் பணிபுரிகின்றனா். மேலும், 6 மாதங்களுக்கு ஒரு முறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும்.
கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் 14,109 கா்ப்பவதிகள் இச்சேவையின் மூலம் பயன் அடைந்துள்ளனா். அதிலும் குறிப்பாக 203 கருவுற்ற பெண்களுக்கு ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்துள்ளது. கரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ்கள் மூலமாக கடந்தாண்டு மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 8,223 போ் பயனடைந்துள்ளனா்.
இது தவிர, சாலைப் போக்குவரத்து மற்றும் இதர விபத்துகளின் காரணமாக பாதிக்கப்பட்டவா்கள் 8,422 நபா்கள், விஷம் அருந்தியவா்கள் மற்றும் தற்கொலைக்கு முயன்றவா்கள் 2,056 நபா்கள், விலங்குகள் மற்றும் பாம்புகளால் கடிபட்டு பாதிக்கப்பட்டவா்கள் 1,459 நபா்கள், கடுமையான வயிற்றுவலியினால் பாதிக்கப்பட்டவா்கள் 3,079 நபா்கள், இதயநோய், மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பு காரணமாக பாதிக்கப்பட்டவா்கள் 6,444 நபா்கள், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட 707 நபா்கள், இதர மருத்துவ உதவி பெற்ற 10,968 நபா்கள் என மொத்தம் 55,467 நபா்கள் கடந்த 2021ஆம் ஆண்டில் பயன் அடைந்துள்ளதாக அவா் கூறினாா்.